நெல்லை அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகை மர்மமான முறையில் மாயமானது.
நெல்லையை அடுத்த ராமையன்பட்டி அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் செல்வகணபதி மனைவி கணபதியம்மாள் வயது 70. இவர் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு டெய்லர் கடைக்கு செல்வதற்காக ராமையன்பட்டியில் இருந்து நெல்லை சந்திப்பிற்கு அரசு பஸ்ஸில் புறப்பட்டார். அப்போது அந்த பஸ்ஸில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் மிகுந்த சிரமத்துடன் கணபதியம்மாள் பஸ்ஸில் ஏறினார். பஸ் ராமையன்பட்டி நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக தனது கழுத்தில் கிடந்த சுமார் 4 பவுன் எடையுள்ள தங்கசெயினை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக பஸ் ஓட்டுனரிடம் தனது நகையை காணவில்லை என்று கணபதி அம்மாள் தெரிவித்தார். கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்தி மர்ம நபர்கள் யாரோ நகையை திருடி சென்றிருக்கலாம், என்று தெரிவித்த பஸ் ஊழியர்கள் இது குறித்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி கணபதி அம்மாள் அருகில் இருந்த மானூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிப்பதற்காக சென்றார். ஆனால் அங்கு பணியில் இருந்த போலீசார் இந்த சம்பவம் தங்களது எல்லைக்குட்பட்டது அல்ல என்றும், தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கும்படியும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான கணபதி அம்மாள் தள்ளாத வயதிலும் வேறு வழியின்றி கடும் சிரமங்களுக்கு இடையே தச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று தனது புகார் மனுவை அளத்தார் .
மூதாட்டியின் நிலையை அறிந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் பிரசன்ன குமார், உடனடியாக தலையிட்டு நகை மாயமானதாக கூறப்படும் இடம் மானூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டிருந்தாலும் வயதான பெண்மணியை அலைக்கழிக்க வேண்டாம் என்று தச்சநல்லூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பெயரில் தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் நகையை திருடி சென்ற மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






