சுயேச்சைகளே இல்லை.. வெறும் 5 பேர்தான்! தமிழகத்தில் குறைவான வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி இதுதான்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள். சுயேச்சை வேட்பாளர்கள் ஒருவர் கூட போட்டியிடாத தொகுதியாக அம்பாசமுத்திரம் தொகுதி மாறி இருக்கிறது. அதிமுக, காங்கிரஸ், தவெக, பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் என 5 கட்சிகளுக்கு இடையே மட்டுமே போட்டி உள்ளது. இதேபோல் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக கரூர் தொகுதி இருந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ளது அம்பாசமுத்திரம் தொகுதி. அதிமுகவின் கோட்டைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையாவே இந்த முறையும் வேட்பாளராக உள்ளார்.

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி

அம்பாசமுத்திரம் தொகுதியில் வெறும் 5 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், வேட்பு மனு பரிசீலனையின் போது வெறும் 6 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதிமுக சார்பில் இசக்கி சுப்பையா, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விபி துரை, தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் எஸ். ராஜகோபால், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இசக்கி கண்ணன், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ் சிவசங்கரன் ஆகிய 5 பேர் மட்டுமே போட்டி களத்தில் உள்ளனர். சுயேச்சையாக வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்த சுப்பையா என்பவர் தனது வேட்பு மனுவை இன்று திரும்ப பெற்றார்.

5 பேர் மட்டுமே களத்தில்

இதனால், அம்பாசமுத்திரத்தில் வெறும் 5 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். சுயேச்சைகளே போட்டியிடாத தொகுதியாக அம்பாசமுத்திரம் உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் சேர்த்து குறைந்த வேட்பாள்ர்கள் போட்டியிடும் தொகுதியாக அம்பாசமுத்திரமே உள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. இருந்தாலும் பல்வேறு தொகுதிகளில் சுயேச்சைகள் அதிக எண்ணிக்கையில் வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம். அரசியல் கட்சியை சேர்ந்தவர்களே சுயேச்சையாக போட்டியிட வைக்கப்படுவார்கள் என்றும் பரவலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுவதுண்டு.

ஒரு சுயேச்சை கூட போட்டியில்லை

அதுபோக, முக்கியமான வேட்பாளராக இருந்தால் அவர் பெயரில் உள்ள சிலர் சுயேச்சைகளாக போட்டியிடும் சுவாரசியங்களும் அரசியல் களத்தில் நிகழும். உதாரணத்திற்கு விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் கூட ஜோசப் என்ற பெயரில் 2 பேரும், விஜய் என்ற பெயரில் 2 பேரும் என 4 பேர் அவரது பெயருடன் போட்டியிடுகிறார்கள்.

இப்படி அரசியல் களத்தில் பல்வேறு சுவாரசியங்களும் நடைபெறும். பலரும் தாமாக முன்வந்து சுயேச்சையாக போட்டியிட்டு மக்கள் ஆதரவை பெற முயற்சிப்பார்கள். ஆனால், அம்பாசமுத்திரம் தொகுதியில் ஒரே ஒரு சுயேச்சை கூட போட்டியிடவில்லை.

கரூரில் 79 பேர் போட்டி

அதேபோல, தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கரூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் ஆசி. எம். தியாகராஜன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தவெக சார்பில் மதியழகன், நாம் தமிழர் கட்சி சார்பில் கருப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிகளவிலான சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.