பாபநாசத்தில் தூய்மை திருவிழா மாணவர்களுக்கான ஓவியம், பேச்சுப் போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன

அம்பை, மே 31:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பில் “தூய்மை திருவிழா” என்ற தலைப்பில் பாபநாசம் கோவில் வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்துகளை பொதுமக்களை கவரும் வகையில் தங்களது கலைத்திறமைகள் மூலம் வெளிப்படுத்தினர்.

போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ஆணையாளர் மகாதேவன், நகரமன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் மற்றும் பாபநாசம் கோவில் செயல் அலுவலர் ஆகியோர் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களை வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் ஆறுமுக நயினார், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் இளங்கோ மற்றும் பரப்புரையாளர்கள் அன்சி மேரி, இந்திரா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும், விக்கிரமசிங்கபுரம் வாசகர் வட்டத் தலைவர் மைதீன் பிச்சை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர்கள் சுபா, பொன் ரேகா, கீதா ஆறுமுகம், கோமதி திருநாவுக்கரசு, சுகாதார மேற்பார்வையாளர்கள் முத்து, தெட்சணாமூர்த்தி, பரமசிவன் மற்றும் சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்