நெல்லை, அக். 23: நெல்லை மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஊத்து பகுதியில் அதிக மழை பதிவாகியுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை கிடைக்கும். வழக்கமாக அக்.18ம் தேதி துவங்கும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்பே துவங்கியது. இந்நிலையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தெ் தமிழக கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய, விடிய கன மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
விடிய, விடிய பெய்த மழை நேற்று காலையும் தொடர்ந்ததால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து நெல்லை கலெக்டர் ஆனந்த் மோகன், தென்காசி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் ஆகியோர் உத்தரவிட்டனர். நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அம்பையில் 62 மிமீ, சேரன்மகாதேவியில் 24 மிமீ, மணிமுத்தாறில் 46.4 மிமீ, நாங்குநேரியில் 14 மிமீ, பாளையங்கோட்டையில் 61.2 மிமீ, பாபநாசம் 27 மிமீ, ராதாபுரத்தில் 23 மிமீ, நெல்லையில் 39.2 மிமீ, சேர்வலாறு அணையில் 25 மிமீ, கன்னடியன் அணைக்கட்டில் 57.8 மிமீ, களக்காட்டில் 28.2 மிமீ, கொடுமுடியாறு அணையில் 50 மிமீ, மூலக்கரைப்பட்டியில் 20.2 மிமீ, நம்பியாறு அணையில் 80 மிமீ, மாஞ்சோலையில் 68 மிமீ, காக்காச்சியில் 88 மிமீ, நாலுமுக்கு எஸ்டேட்டில் 11.2 செமீ (112 மிமீ), ஊத்து எஸ்டேட்டில் 12.8 செமீ (128 மிமீ) மழை பதிவானது.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை செங்கோட்டையில் 9 செமீ (90 மிமீ) மழை பதிவானது. சிவகிரியில் 71 மிமீ, குண்டாறு அணையில் 70 மிமீ, கருப்பாநதி அணையில் 69.5 மிமீ, ஆய்க்குடியில் 64, தென்காசியில் 62 மிமீ, ராமநதி அணையில் 50 மிமீ, அடவிநயினார் கோயில் அணையில் 48 மிமீ, கடனாநதி அணையில் 40 மிமீ, சங்கரன்கோவிலில் 24 மிமீ மழை பதிவானது.
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் விடிய, விடிய மழை பெய்த போதிலும் காலை 8 மணிக்கு பிறகு மழை குறைந்தது. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயில் தலை காட்டியது.
பாபநாசம் அணை 2 அடி உயர்ந்தது
அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணையில் 48 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 50.85 அடியானது. அணைக்கு விநாடிக்கு 1089 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையில் 70.31 அடியாக இருந்த நீர்மட்டம் 70.80 அடியாக உயர்ந்தது. மணிமுத்தாறு அணையில் 60.90 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 61.84 அடியானது. அணைக்கு விநாடிக்கு 570 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து விநாடிக்கு 25 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 6 அடியாக உள்ளது. நம்பியாறு அணையின் நீர்மட்டம் 10.30 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணையில் 12.50 அடியாக இருந்த நீர்மட்டம் மேலும் ஒரு அடி உயர்ந்து 14 அடியானது. அணைக்கு விநாடிக்கு 37 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 2 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கனமழை மிதமான மழையானது
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முழுவதும் மிக கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், இரு மாவட்டங்களிலும் எங்குமே மிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை, மிதமான மழை மட்டுமே ெபய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அதன்படி நேற்று பகல் முழுவதும் எங்கும் கனமழை இல்லை






