கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு: நெல்லையில் 7ம்தேதி முழு கடையடைப்பு

நெல்லை டவுனில் கனரக வாகனங்கள் வந்து செல்ல நேரக் கட்டுப்பாடு மற்றும் புதிய லாரி முனையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 7-ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நெல்லை பேட்டை பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த லாரி முனையம், தற்போது சோதனை அடிப்படையில் 11 மாதங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு, நெல்லை டவுன் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, நெல்லை வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று அவசர பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடத்தில் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் கூறியதாவது,

“சுமார் 15 ஆண்டுகளாக, மாநகராட்சிப் பகுதிகளில் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சரக்குகளை இறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நெல்லை மாவட்ட ஆட்சியர் திடீரென இந்த முறையை ரத்து செய்து, அனைத்து வாகனங்களும் இரவு 10 மணிக்கு மேல் மட்டுமே சரக்குகளை இறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது சில்லறை வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இரவு நேரங்களில் தொழிலாளர்கள், குறிப்பாக பெண் தொழிலாளர்கள் பணிபுரிவதில் சிக்கல் உள்ளது. மழைக்காலங்களில் பொருட்கள் சேதமடையவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் முறையிட்டும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. நேரக் கட்டுப்பாடு மற்றும் பேட்டை லாரி முனையத்திற்கு சரக்குகளைக் கொண்டு செல்வதை எதிர்த்து வருகிற 7ம்தேதி முழு கடையடைப்பு நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இந்த முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு காய்கறி மார்க்கெட், லாரி உரிமையாளர்கள் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் , பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சந்திப்பு உள்ளிட்ட மாநகரின் அனைத்துப் பகுதி வியாபாரிகளும் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வரும் 7-ம் தேதி காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அனைத்துக் கடைகளும் முழுமையாக அடைக்கப்படும். பழைய முறைப்படி மதியம் 12 மணி முதல் 4 மணி வரை சரக்குகளை இறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும், தவறினால் தீபாவளிக்குப் பிறகு , காலவரையற்ற கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.

லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜா , “வியாபாரிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, வரும் 7ம்தேதி நெல்லை டவுன் பகுதியில் இருந்து சரக்குகளை ஏற்றுவதோ அல்லது இறக்குவதோ இல்லை. அன்றைய தினத்தில் லாரிகளும் ஓடாது,” என்றார்.