கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான் குளம் கிராமத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி பள்ளிக்கு செல்ல காலை வேளையில் கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள், பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளம், அயன்சிங்கம் பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, தெற்கு பாப்பான் குளம் பகுதிகளிலிருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேருந்தில் சென்று கல்வி பயின்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் காலை நேரத்தில் ஒரே ஒரு பேருந்து மட்டும் இயக்கப்படுவதால் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் மிகவும் சிரமப்படுவதாகவும், எனவே தெற்கு பாப்பான்குளத்தில் இருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் பகுதிகளுக்கு தனியாக பேருந்து இயக்க வேண்டும் என்றும் அப்பகுதி மாணவர்கள் பெற்றோர்கள் தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஏற்கனவே கடந்த ஆண்டில் இதுபோன்று பஸ்சை சிறை பிடித்து போராட்டம் செய்தும் அதிகாரிகளிடம் பலமுறை மனு வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
இதை கண்டித்து நேற்று காலை தெற்கு பாப்பான்குளம் வழியாக வந்த அரசு பேருந்தை மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுனர், நடத்துனர், போக்குவரத்து அதிகாரிகள், காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட நிலையில் அனைவரும் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை முன்னிட்டு கண்காணிப்பு சென்றுள்ளதால் வர இயலாத நிலை உள்ளதாக தெரியவந்தது.
இதை அடுத்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஒரு வாரம் அவகாசத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.






