கல்லிடை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும்

மதுரை கோட்ட மேலாளரிடம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை

அம்பை, அக். 1:

திருநெல்வேலி–செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் கல்லிடைக்குறிச்சி வழியாக சென்னைக்கு தினசரி ரயில் சேவை இயக்க வேண்டும் என்று கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா அவர்களை சந்தித்து, கல்லிடைக்குறிச்சி வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தின் தென்பகுதியில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினசரி பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருக்கும். எனவே, பயணிகளின் நீண்டகால கோரிக்கையை பரிசீலித்து, கல்லிடைக்குறிச்சி வழியாக சென்னைக்கு தினசரி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்திற்கு ‘பிளாக் ஸ்டேஷன்’ அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதவிர, கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தின் இருபுறங்களிலும் அமைந்துள்ள ரயில்வே கேட் எண்கள் 53 மற்றும் 55 தொடர்பான பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த இரு ரயில்வே கேட்டுகளும் தினசரி ரயில் வருவதற்கு சுமார் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே பலமுறை மூடப்படுவதால், அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள், பள்ளி–கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் அவசர தேவைக்காக பயணிப்போர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, தினசரி பல முறை கேட் மூடப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும், இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கூடுதல் கோட்ட மேலாளர் பிரசன்னா அவர்களிடமும் தனியாக கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

நிகழ்வின்போது ரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள் வீரப்பபுரம் கார்த்திக், ஷேக் ஆஸாத் ஆகியோர் உடனிருந்தனர்.

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தின் வளர்ச்சி, பயணிகளுக்கான கூடுதல் ரயில் சேவைகள் மற்றும் ரயில்வே கேட் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஆகிய கோரிக்கைகள் மீது ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் வலியுறுத்தினர்.