போயிங் பி737 மேக்ஸ் விமானங்களில் மென்பொருள் கோளாறு கண்டுபிடிப்பு

புதுடெல்லி/மும்பை: போயிங் நிறுவனத்தின் பி737 மேக்ஸ் ரக விமானங்களின் மென்பொருளில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் மேலே சென்று, வேறு பாதையில் திரும்பும்போது, அதன் தானியங்கி வழிகாட்டுதல் அமைப்பு தானாகவே இயங்குவதை நிறுத்திக்கொள்ளும் அபாயம் இதில் உள்ளது.

இப்போதைக்கு விமானிகள் இதைக் கையாள முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள போயிங் நிறுவனம், இந்தச் சிக்கலை நிரந்தரமாகச் சரிசெய்ய புதிய மென்பொருள் அப்டேட்டை தயாரித்து வருகிறது. இந்தியாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (53 விமானங்கள்) மற்றும் ஆகாசா ஏர் (43 விமானங்கள்) ஆகிய நிறுவனங்களிடம் மொத்தம் 96 பி737 மேக்ஸ் விமானங்கள் உள்ளன.

இது குறித்து ஆகாசா ஏர் நிறுவனம் கூறுகையில், தங்களது விமானங்களின் பாதுகாப்பிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், விமானங்கள் வழக்கம் போல் பாதுகாப்பாக இயக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதேபோல், இந்த வாரத் தொடக்கத்தில் ஏர்பஸ் ஏ321 நியோ விமானங்களின் உடற்பகுதி பூச்சில் குறைபாடு கண்டறியப்பட்டதால், இந்தியாவில் இண்டிகோ நிறுவனத்தின் சுமார் 12 விமானங்கள் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.