அம்பை அரசு வழக்கறிஞருக்கு பாராட்டு


அம்பாசமுத்திரம், செப்.17:

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக புதிதாக பொறுப்பேற்றுள்ள மூத்த வழக்கறிஞர் டி. செல்வகுமாருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் மகா எஜுகேஷனல் அண்ட் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகியும், சேவா ரத்னா விருது பெற்றவருமான கல்லிடைக்குறிச்சி மூ. மகாராஜன், அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ள டி. செல்வகுமாரை நேரில் சந்தித்து, அவருக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

அப்போது, நீதித்துறையில் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவரது சட்டப்பணிகள் மேலும் சிறக்க வேண்டும் என்றும் வாழ்த்து கூறப்பட்டது.

மூத்த வழக்கறிஞர் டி. செல்வகுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நீண்டகால சட்டப்பணி அனுபவம் கொண்ட அவர் தற்போது அம்பாசமுத்திரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில் கவிஞர் மரகத சுப்பிரமணியன் உடனிருந்தார்.