மதுக் கடைகளை மூடும் அரசியல் கட்சிகளுக்கே மக்கள் வாக்கு தமிழக காந்தியவாதிகள் கோரிக்கை
நெல்லை ஏப்.10
2026 ஏப்ரல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழக காந்தியவாதிகள் மதுவிலக்கை உறுதிப்படுத்தும் அரசியல் கட்சிக்கே பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற காந்திய சிந்தனையை தூண்டி விட்டுள்ளது பரபரப்பாகிறது.
செங்கோட்டை மூத்த காந்தியவாதி வி. விவேகானந்தன், காந்திய சிந்தனையாளர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர். விஜயலட்சுமி, “காந்திய வாழ்வியல்” அன்பு சிவன் தென்காசி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசியதாவது.
இந்தத் தேர்தலில் மதுவிலக்கை அறிவிக்கும் அரசியல் கட்சிக்கே பொதுமக்கள் ஆதரவு இருக்கும். மதுவிலக்கு ஒன்றே உண்மையான சுதந்திரம் என மகாத்மா கூறினார். மதுவிலக்கு ஒன்றால் மட்டுமே மக்கள் உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும். பிஹார், குஜராத், மணிப்பூர், நாகலாந்து, லட்சத்தீவு, மிசோரம் என இத்தனை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இருக்கும் போது தமிழ்நாட்டில் அது ஏன் சாத்தியம் இல்லை என பொய்யாக நம்ப வைக்கப்படுகிறது?
யார் வாக்கு கேட்டு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை மூடுவீர்களா என மக்கள் கேட்க ஆரம்பிக்க வேண்டும். பொதுமக்கள் ஒன்றுபட்டு எங்களுக்கு மதுக்கடைகள் வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்தால் நிச்சயம் மதுக்கடைகளுக்கு மூடு விழா நடக்கும். குடும்ப வன்முறை, தாக்குதல்கள், கொலைக் குற்றங்கள், மன உளைச்சல், தற்கொலை, விவாகரத்து, பாலியல் குற்றங்கள், சாலை விபத்துக்கள் என அனைத்து அல்லல்களுக்கும் பொது தீர்வாகிவிடும் மதுவிலக்கு அறிவிப்பு.
மக்கள் மீது உண்மையிலேயே கரிசனம் இருக்கும் வெற்றி வாய்ப்பு கொண்ட கட்சிகளும், தலைவர்களும் தேர்தலுக்கு முன் மதுக்கடைகள் மூடப்படும் என்ற உத்தரவாதத்தை மகாத்மா காந்தி மீது ஆணையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் பெண்கள், இளைஞர்கள், குடும்பப் பெரியவர்கள், முதல் முறையாக தேர்தலில் வாக்களிப்பவர் என அத்தனை பேரும் ஒருங்கிணைந்து அந்தக் கட்சிக்கு வாக்களிப்பர். சமூக பாதுகாப்பும் உயரும். உலகம் போற்றும் மாநிலமாக தமிழகம் அடையாளப்படும்.
மது என்ற ஒரு கதவு அடைபடும்போது கல்வி, ஆரோக்கியம், உணவு, தனிநபர் முன்னேற்றம், குடும்ப மேம்பாடு, சிறு தொழில் வளர்ச்சி, குடும்ப மகிழ்ச்சி என பல கதவுகள் திறக்கும். வெற்றி வாய்ப்பை கணக்கிடும் அரசியல் தலைமைகள் காந்தியவாதிகள் மதுவிலக்கு குரலை அலட்சியப்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம் இவ்வாறு தென்காசியில்.
நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது விவேகானந்தன் திருமாறன்,விஜயலட்சுமி
அன்பு சிவம் ஆகியோர் எடுத்துரைத்தனர்






