கருட, குதிரை, அனுமன், இந்திர வாகனங்களில் அய்யா வீதி உலா – திரளான அன்புக்கொடி மக்கள் பங்கேற்பு
நெல்லை, செப். 14:
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே கங்கணாங்குளம் பகுதியில் உள்ள திருவிருத்தான்புள்ளி–வேலியார்குளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழா கடந்த 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
விழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு பணிவிடை தர்மம், மதியம் 12 மணிக்கு பணிவிடை உச்சிப்படிப்பு தர்மம், மாலை 6 மணிக்கு திருஏடு வாசிப்பு தர்மம், இரவு 7 மணிக்கு பணிவிடை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக அய்யா பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கருட வாகனம், குதிரை வாகனம், அனுமன் வாகனம் மற்றும் இந்திர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அய்யா எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வீதி உலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் 10-ம் திருவிழா நாளில் சிறப்பு நிகழ்ச்சியாக அய்யாவை நாகத் தொட்டில் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான அன்புக்கொடி மக்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
ஆவணித் திருவிழாவின் 11 நாட்களிலும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதர்மம் வழங்கப்பட்டது. விழா நாட்கள் முழுவதும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டு அருளாசி பெற்றனர்.
ஆன்மிக சிறப்புடன் நடைபெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். விழா முழுவதும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.






