சேரன்மகாதேவி, செப்.9:
சேரன்மகாதேவி பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே லைன் தெரு சாலை முகப்பில் நீண்ட நாட்களாக ஏற்பட்டிருந்த பள்ளங்களால் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் சென்று வரும்போது சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இதையடுத்து ஆட்டோ சங்க நிர்வாகிகள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் அவர்களிடம் சாலை பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை சேரன்மகாதேவி பேரூராட்சி 1-வது வார்டு உறுப்பினர் முருகன் ரவிச்சந்திரன் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களை சிமெண்ட் மூலம் பூசி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டார்.
சாலை பள்ளங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டதற்கு பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் மகிழ்ச்சி தெரிவித்து, வார்டு உறுப்பினர் முருகன் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு மற்றும் மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் சிதம்பரம், உதயசூரியன், பாலசுப்பிரமணியன், ஜோதிமணி மற்றும் ரயில்வே வாகன காப்பாளர் சிவராஜ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.






