கீழ்அக்ரஹாரம் ஏரி வாய்க்கால் பகுதியில் 4,000 பனை விதைகள் நடவு

வில்லியனூர் கொம்யூன் பகுதியில் 1 லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்.

வில்லியனூர், ஆக.29:
வில்லியனூர் கொம்யூன் பகுதியில் பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், 2026–2027ம் ஆண்டு முழுவதும் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி கீழ்அக்ரஹாரம் ஏரி வாய்க்கால் பகுதியில் நேற்று (ஆக.28) காலை நடைபெற்றது.
வில்லியனூர் BDO அலுவலகம் மற்றும் தனசுந்தராம்பாள் சாரிடபுள் சொசைட்டி (DSC – Society) ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்தின் தொடக்கமாக, கீழ்அக்ரஹாரம் ஏரி வாய்க்கால் பகுதியில் சுமார் 4,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் வில்லியனூர் BDO M. சிவசங்கரன், JE ராமச்சந்திரன், பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் ஆகியோர் பனை விதைகளை நடவு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் அரசு சம்மேளம் நிர்வாகி K. ராதாகிருஷ்ணன், கீழ்அக்ரஹாரம் S. சிவக்குமார் (OBC-NR அணி), பொதுப்பணித்துறை A. பெரியசாமி, கிராம பஞ்சாயத்து GRS ராஜகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மண்வாசம் இளைஞர் மன்றத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் லிங்கேஸ்வரன் மற்றும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று பனை விதைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாத்தல், மண் அரிப்பைத் தடுப்பது, சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு வில்லியனூர் கொம்யூன் பகுதி முழுவதும் நடப்பு ஆண்டு முழுவதும் தொடர்ந்து பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 4,000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2026–2027ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் பனை விதைகளை நடவு செய்யும் இலக்கை எட்டுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.