2003 முதல் 2025 வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழக அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நலச்சங்கம் வலியுறுத்தல்

திருச்சி, ஆக.30:

தமிழக அரசு கல்லூரி ஆசிரியர் பங்களிப்பு திட்ட ஓய்வூதியர் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜோசப் ஜான் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் துணைத் தலைவர் யூனஸ், மகளிர் துணைத் தலைவர் சுப்புரத்தினம், செயலாளர் ரவி, இணைச் செயலாளர்கள் அன்பழகன், அருணா, பொருளாளர் கோபண்ணசாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜோசப் ஜான் மற்றும் செயலாளர் ரவி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“01.04.2003-க்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், 01.01.2026 முதல் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய முறையின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஆனால், 01.04.2003 முதல் 31.12.2025 வரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) பணியாற்றி ஓய்வு பெற்ற சுமார் 56 ஆயிரம் பேர், தற்போது மாதாந்திர ஓய்வூதியம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

எனவே, 2003 முதல் 2025-ம் ஆண்டு வரை அரசு பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் தமிழக அரசு உரிய ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை அரசு கனிவுடன் பரிசீலித்து, ஓய்வூதிய உரிமையை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.