40 ஆண்டுகளாக இயங்கிய 1 மற்றும் 10A பேருந்துகளை மீண்டும் இயக்க கோரி போக்குவரத்து அமைச்சருக்கு பொதுமக்கள் மனு

திருநெல்வேலி, ஆக.4:

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வீரவநல்லூர், மலையான் குளம், பொட்டல், மூலச்சி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன்பார்த்திபன் அவர்களுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

தெற்கு வீரவநல்லூர், மலையான் குளம், பொட்டல், மூலச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் பி.எச். பாண்டியன் பதவியில் இருந்த காலத்தில், அரசு போக்குவரத்துக் கழகத்தின் தடம் எண் 10A பேருந்து வீரவநல்லூரில் இருந்து புதூர், மாதுடையார்குளம், பாடகபுரம், பொட்டல், மூலச்சி விலக்கு, கரம்பை வழியாக அம்பாசமுத்திரம் வரை இயக்கப்பட்டு வந்தது. அதேபோல் தடம் எண் 1 பேருந்தும் இப்பகுதி கிராமங்கள் வழியாக பல்வேறு நேரங்களில் இயக்கப்பட்டு, பொதுமக்களுக்கு பெரிதும் பயன்பட்டு வந்தது.

இந்த இரண்டு பேருந்துகளும் இயக்கப்பட்டதால், பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெளியூருக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் விவசாயிகள் மிகவும் பயனடைந்தனர்.

ஆனால், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தடம் எண் 1 மற்றும் 10A பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தினமும் வெளியூருக்குச் சென்று கல்வி பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். போதிய பேருந்து வசதி இல்லாததால் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அன்றாட போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, மாணவர்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் நலனை கருத்தில் கொண்டு, முன்பு இயக்கப்பட்ட தடம் எண் 1 மற்றும் 10A அரசு பேருந்துகளை மீண்டும் பழைய வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன்பரர்த்திபன் அவர்களிடம் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.