போர்த் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ்.ரவிகுமார், கருணாஸ், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ஆக்ஷன் த்ரிலர் ஜானரில் உருவாகியுள்ளது. இன்று காலை முதலே தனுஷ் ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டு பேனர் வைத்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனிடையே இயக்குநர் மாரி செல்வராஜ் படத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார். அவர் ஒடிசாவில் நடந்த ஜித்து முண்டா போல் தனுஷ் கேரக்டர் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதாவது தனது சகோதரியின் மறைவிற்குப் பிறகு, அவர் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுப்பதற்காக, ஜித்து முண்டா என்பவர் தனது சகோதரியின் எலும்புக்கூட்டை ஆதாரமாக வங்கிக்கு எடுத்து சென்றிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கிராமத்து பின்னணியிலான மிகச் சுவாரஸ்யமான ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு, சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சுவாரஸ்யமான ஹெஸ்ட் த்ரில்லர் படம். வழக்கம் போலவே, தனுஷின் நடிப்பு மிகச் சிறப்பு. கொள்ளை அடிக்கும் காட்சிகள் அதிரடியாக இருந்தன. இத்திரைப்படம் மாபெரும் வெற்றிபெற, ஒட்டுமொத்த நடிகர்களுக்கும் மற்றும் படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.






