அம்பாசமுத்திரம், ஏப். —
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் பங்குனித் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு தொடர்ந்து ஏழு நாட்கள் சுவாமி மற்றும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இந்நிலையில், 8ம் திருவிழாவாகிய இன்று காலை பச்சை சாத்தி வீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் 21 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மேலும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் பக்தியுடன் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு “தெட்சணாமூர்த்தி பொதிகாசம்” என கோஷமிட்டவாறு பக்தி பரவசத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.
பின்னர் கோவிலில் தீப ஆராதனை நடைபெற்றது.
திருவிழா ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
பங்குனித் திருவிழா காரணமாக பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கோவில் வளாகம் முழுவதும் ஆன்மிக ஒளியில் குளித்தது குறிப்பிடத்தக்கது.






