மாநிலங்களவையில் மீனவர்களுக்காக குரல் கொடுத்த வைகோ, கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ எம்.பி நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே பேசியதாவது:
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆகவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன. இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அண்மையில் ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது .
தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை பறிக்கும் வகையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இது மத்திய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன.
எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனை இன்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும் மீனவ சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கவும் மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.
தொடர்ச்சியான கைதுகள் மீனவர்களுக்கு நெருக்கடியை உருவாக்குவது மட்டுமில்லாமல் மீன்பிடிப்பு தொழிலையும் கேள்விக்கு உள்ளாக்கிறது. மீன்பிடித் தொழிலின் நீண்டகால நிலைத்தன்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள், படங்கள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.






