சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு எதிராகவே அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். மீறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றிபெற்றபோதிலும், மெஜாரிட்டி கிடைக்காததால், தவெக தலைவர் விஜய் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். தமிழக முதல்வராக கடந்த 10ம் தேதி விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆளுநர் உத்தரவுப்படி அவர் இன்று தனது ஆட்சிக்கான பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்கிறார்.
திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடிக்க விஜய், அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கி, அதில் ஒரு பிரிவினருக்கு ஆட்சியில் பங்கு தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி தனது அணிக்கு ஆதரவாக மாற்றியுள்ளார். இதனால் அதிமுகவில் வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரது தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. இந்த அணிக்கு 28 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி அணிக்கு 19 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை குழுத் தலைவர் தேர்வை மையமாகக் கொண்டு உள்கட்சிப் பிரச்னை வெடித்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில், இன்னமும் அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதது கட்சிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபுறம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி செயல்பட்டு வரும் நிலையில், மறுபுறம் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆதரவு அணியும் தனித்த அரசியல் நிலைப்பாட்டில் செயல்பட்டு வருவது, அதிமுகவில் மீண்டும் பிளவை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று சட்டப்பேரவை கூட்டம் முடிந்ததும் தலைமை செயலகத்தில் அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். சுமார் ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனையில், இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்பட்ட 19 எம்எல்ஏக்களில் 10 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது கட்சிக்குள் ஆதரவு பலம் குறைந்து வருகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.






