கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து மாநிலத்தை புரட்டிப்போட்டுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று தொடர்ந்து கனமழை பெய்தது. கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 251.4மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது கடந்த 1986ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச மழையின் அளவாகும். கடந்த 137 ஆண்டுகளில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையாகவும் இது அமைந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் துர்கா பூஜைக்கு தயாராகி வந்தது. இந்நிலையில் மழை பெய்து மாநிலத்தை புரட்டிப்போட்டுள்ளது. சாலைகள் முழுவமும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. கொல்கத்தா உட்பட பல்வேறு பகுதிகளிலும் தண்டவாளங்கள் சேதமடைந்ததால் மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 31 விமானங்கள் தாமதமதாக இயக்கப்பட்டன. தெற்கு கொல்கத்தாவின் காரியா மற்றும் ஜோத்பூர் பூங்கா பகுதிகளில் குடியிருப்புக்களை மழைநீர் சூழ்ந்தது.
தரைதளங்கள் மற்றும் கடைகளில் இடுப்புவரைக்கும் மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு குடியிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்காக குடியிருப்புக்களை விட்டு வெளியேறினார்கள். இது குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி,‘‘இதுபோன்ற மழை பொழிவை நான் இதற்கு முன் பார்த்தது இல்லை. மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவில் 8 பேரும், வடக்கு 24 பர்கானாஸில் உள்ள ஷாஷன் மற்றும் தெற்கு 24 பர்கானாஸில் அம்தாலா ஆகிய பகுதிகளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5லட்சம் நிதியுதவி மற்றும் சிஇஎஸ்இயில் வேலைவாய்ப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். தொடர் மழையினால் ஏற்பட்ட பாதிப்புக்களை தொடர்ந்து இன்றும், நாளையும் அனைத்து அரசு கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






