நெல்லை மாணவர் சூரிய நாராயணன் முதலிடம் எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு 30 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நெல்லை மாணவர் சூரிய நாராயணன் முதலிடம் பிடித்துள்ளார். முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி அரசு ஒதுக்கீடு இடங்களில் 6600 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. அதேபோல் பி.டி.எஸ் படிப்பில் 1583 அரசு ஒதுக்கீடு இடங்கள் உள்ளன.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 495 எம்.பி.பி.எஸ் இடங்களும் 119 பி.டி.எஸ் இடங்களும் இருக்கின்றன.

இதற்கான 2025-26 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் ஜூன் 6-ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்றது. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு மொத்தம் 72,473 மாணவ மாணவிகள் விண்ணப்பித்தனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் 29 ஆயிரத்து 680 விண்ணப்பங்கள் அதிகம்.

இந்த நிலையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் நேற்று நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்கான அரசு ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத உள் ஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீடு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குனர் பேரணிராஜன், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி இயக்குனர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரசு ஒதுக்கீட்டை பொருத்தவரையில் விண்ணப்பித்த மாணவர்களில் 39,853 மாணவ மாணவிகளுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது பட்டியலில்

  1. சூரிய நாராயணன் (நெல்லை)
  2. அபிநீத் நாகராஜ் (சேலம்)
  3. ஹர்திக் விஜயராஜா (திருப்பூர்)
  4. ராகேஷ் (தர்மபுரி )
  5. பிரஜன் ஸ்ரீவாரி (செங்கல்பட்டு)
  6. நிதின் பாபு (விருதுநகர் )
  7. கைலேஷ் கிரேன்கு (கள்ளக்குறிச்சி)
  8. நிதின் கார்த்திக் (சென்னை )
  9. பிரகதீஷ் சந்திரசேகர் (தர்மபுரி)
  10. பொன் ஹரிணி (தேனி)

ஆகியோர் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளனர்.

ஏழு புள்ளி ஐந்து சதவீத ஒதுக்கீட்டில் 462 மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது பட்டியலில்

  1. திருமூர்த்தி (கள்ளக்குறிச்சி)
  2. சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி)
  3. மதுமிதா (கள்ளக்குறிச்சி)
  4. மெய்யரசி (நாமக்கல்)
  5. மோனிகா (திருவள்ளூர்)
  6. செந்தில்வேல் குமரன் (கரூர் )
  7. நிர்மல் ராஜ் (சேலம் )
  8. நிதீஷ் (கிருஷ்ணகிரி)
  9. ஜெகதீஷ் (தர்மபுரி)
  10. நிர்மல் (சேலம்)

ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான ஏழு புள்ளி ஐந்து சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு ஆகியவை நேரடி கலந்தாய்வு முறையில் வருகிற 30-ஆம் தேதி தொடங்குகிறது. அதேபோல பொது பிரிவு அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 30-ஆம் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது.