ரயில்களில் அடையாள அட்டை இல்லாமல் பொருட்களை விற்றால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உணவு, குடிநீர், குளிர்பானங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சில ரயில் நிலையங்களில் மற்றும் அங்கு வரும் ரயில்களில் சீசன் பொருட்கள், உள்ளூர் சார்ந்த பிரபல பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு வரும் ரயில்களில் அல்வா, போலி, கடலை மிட்டாய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட உள்ளூர் பொருட்கள் மட்டும் இன்றி உணவு பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களும் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் விற்கப்படும் பொருட்கள் தரம்மற்று இருப்பதாகவும் சில விற்பனையாளர்கள் குறைந்த தரமற்ற உணவு பண்டங்களை விற்பதாக ரயில்வே அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் ரயில்வே வாரியம் தரமற்ற பொருட்களை ரயில்களை விற்க தடை விதித்துள்ளது. மேலும் ரயில்வேக்கு சொந்தமான ரயில் நிலையங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஓடும் ரயில்களிலும் பொருட்கள் விற்போருக்கு ஒப்பந்ததாரர்கள் கண்டிப்பாக க்யூ ஆர் கோடுடன் கூடிய அடையாள அட்டை வழங்கிட வேண்டும். அடையாள அட்டையில் பொருட்களை விற்கும் நபரின் பெயர், ஆதார் எண், ஒப்பந்ததாரர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்று இருக்க வேண்டும். மேலும் அடையாள அட்டையில் ஐ ஆர் சி டி சி அதிகாரிகளின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலைய பகுதிகளிலும், நெல்லைக்கு வரும் ரயில்களிலும் தரமற்ற அல்வா விற்பனை பெருகிவரும் நிலையில் ஆர்பிஎப் போலீசார் அத்தகைய நபர்களை தற்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பயணிகளை “ரயில்வேயின் ஒரு பொருள் ஒரு நிலையம்” கடைகளில் விற்கப்படும் தரமான பொருட்களை மட்டுமே வாங்கிட கேட்டுக் கொண்டு வருகின்றனர்.






