சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று முன்தினம் அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் வேட்டையன். இது சூப்பர் ஸ்டாரின் 170வது படம். படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தினை பாராட்டி வருகின்றனர். குறிப்பாக இயக்குநர் ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு சமூக அக்கறையுடன் படம் எடுத்துள்ளார் என பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
வேட்டையன் படத்தின் கதையைப் பொறுத்தவரையில் நீட் தேர்வினால் உயிரிழக்கும் குழந்தைகள் அவர்களின் பெற்றோர்கள், நீட் தேர்வினால் பாதிக்கப்படுபவர்களின் குரலை திரைமொழியில் காட்டியுள்ளனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் போன்ற மாஸ் ஹீரோவுக்கான கண்டெண்ட்டாக இந்த படத்தின் கதையை இயக்குநர் ஞானவேல் மற்றும் கிருத்திகா ஆகியோர் அமைத்த விதம் பாராட்டுக்குரியது. மேலும் பொருளாதாரா குற்றப்பிரிவு அதிகாரியாக ரஜினி மாற்றப்பட்ட பின்னரும்கூட, வில்லனுக்கு எந்த வகையில் தண்டனை பெற்றுத் தரலாம் என கதையை நகர்த்திய விதம் அருமை.
மேலும் பட்ஸ் சட்டம் (Buds Act) குறித்து அமிதாப் பச்சன் எடுக்கும் பாடம் ஒரு விழிப்புணர்வு செஷன். படத்தின் முதல் காட்சியில் இருந்து இறுதிக் காட்சி வரை அனிருத் தனக்கான வேலையை கச்சிதமாகச் செய்யவில்லை என்றாலும் குற்றம் சொல்லும் அளவிற்கு சொதப்பவில்லை. அன்பறிவ் மாஸ்டர்களின் சண்டைக் காட்சிகள் பாராட்டுகளைப் பெறுகின்றது. மேலும் படத்தில் ரஜினிக்கு பல இடங்களில் மாஸ் காட்சிகள், மாஸ் ஓப்பனிங் காட்சிகள் இருக்கின்றது. குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் சூப்பர் ஸ்டார் ஹெலிஹாப்டரில் என்ட்ரி கொடுக்கும் காட்சிகளுக்கு தியேட்டரே அதிர்ந்தது.தியேட்டர்கள்: படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆனது. படத்தில் இடம் பெற்றிருந்த மனசிலாயோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படத்தினை மக்கள் மத்தியில் எளிதாக கொண்டு சென்றது. இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் படம் கிட்டத்தட்ட 900 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வசூல்: ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 900 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. இது இல்லாமல் அண்டை மாநிலங்கள், வட மாநிலங்கள், வெளிநாடுகள் என மொத்த தியேட்டர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். இந்நிலையில் படம் இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதேபோல் முதல் நாளில் படம் ரூபாய் 35 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இதுவரை படம் ரூபாய் 50 கோடிகள் முதல் 60 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இன்றும் நாளையும் என வார இறுதி நாட்கள் இருப்பதால் வேட்டையன் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் வேட்டை நடத்தும் என படக்குழு நம்புகின்றது. மேலும் படக்குழு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.






