Kanguva Exclusive: விக்ரம் படத்தில் `Rolex’ `கங்குவா’வில் சர்ப்ரைஸ் – ஆச்சர்ய என்ட்ரி

”கமலின் ‘விக்ரம்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது…”

வருகிற அக்டோபர் 10ம் தேதியன்று சூர்யாவின் ‘கங்குவா’ திரைக்கு வருகிறது. படத்தின் வி.எஃப்.எக்ஸ் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் இரவும் பகலுமாக புல்லட் வேகத்தில் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றன.

படத்தின் முதல் சிங்கிளான ‘ஃபயர் ஸாங்’ ஆக ‘ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே, மாய நெருப்பே, மலை நெருப்பே’ வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. கொடைக்கானல், ராஜமுந்திரியில் தீப்பந்தங்களின் வெளிச்சங்களிலேயே அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், ஜெகபதிபாபு, நட்டி நட்ராஜ், ‘கே.ஜி.எஃப்’ அவினாஷ், கே.எஸ்.ரவிகுமார், கோவை சரளா, கருணாஸ் எனப் பலரும் நடிக்கின்றனர். சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரும், நண்பருமான வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘கங்குவா’வின் சில காட்சிகளை கண்டு ரசித்த ஜோதிகா ”இந்தப் படத்திற்காக முழுமையாகத் தன்னை அர்பணித்து நடித்து வருகிறார். இருநூறு சதவிகித உழைப்பைப் போட்டு அதற்காகத் தீவிரமாக உழைத்து வருகிறார். தான் விரும்பும் விஷயத்திற்காகத் தன்னை முழுமையாக அர்பணிகத்திருக்கிறார். ‘கங்குவா’ படத்தின் ஒரு சில காட்சிகளைப் பார்த்தேன். நிச்சயம் அனைவரும் வியக்கும் வகையில் அப்படம் நிச்சயம் இருக்கும். அப்படத்திற்காக சூர்யா தனது உடலை வருத்தி, நடிப்பதைப் பார்க்கையில் பிரமிப்பாகயிருக்கிறது” என்றும் சொல்லியிருந்தார்.

சில மாதங்களுக்கு முன்னரே மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்த நிலையில் இப்போது திடீரென படத்தில் கார்த்தியை நடிக்க வைத்துள்ளனர். ‘கங்குவா’ படம் இரண்டு பார்ட்களாக வெளி வரும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், இப்போது படக்குழுவே, அதற்கான லீட் ஆக முதல் பாகத்தில் கார்த்தியை இன்ட்ரோ செய்துள்ளனர். இதற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்ட அரங்கம் அமைத்து, சூர்யா, கார்த்தி காம்பினேஷனில் காட்சிகளை படமாக்கியுள்ளனர். கமலின் ‘விக்ரம்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது போல, ‘கங்குவா’வில் கார்த்தியின் போர்ஷன் இருக்கும் என்கிறார்கள்.

‘காஷ்மோரா’ படத்தில் ரொம்பவே வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி நடித்திருப்பார். ‘கங்குவா’வின் சில பகுதிகளை பார்த்துவிட்டு, இந்தப் படத்தில் அவர் நடிக்க விரும்பினாரா என விசாரித்தால் அப்படியில்லை என்ற பதில் வருகிறது. அதை போல, இந்தக் கதையில் கார்த்தி நடிப்பதற்கான சூழல் இருந்தது. சிவா அவரிடம் நடிக்கக் கேட்டபோது, ரொம்பவே மகிழ்ச்சியுடன் வந்து கார்த்தி நடித்துக் கொடுத்துள்ளார் என்கிறார்கள். இப்போது கார்த்தி நடித்த பகுதியின் கிராபிக்ஸ் வேலைகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *