சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைப் பொது தீட்சிதர்களிடமிருந்து பெற்று, 5 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 4) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் அமர்வு கடந்த அக்டோபர் 30ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதில், கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நிர்வாகத்தைச் சீரமைக்க 5 பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டது.
இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. பாரதிதாசன், இணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார், உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி. ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மேலும் பொது தீட்சிதர்களின் செயலாளர், இந்து சமய அறநிலையத் துறை செயலாளர் ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாக இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
கோயில் சொத்துகள், வரவு செலவுக் கணக்குகள், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட நிர்வாகப் பணிகளை இந்தக் குழு கவனிக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்பது, நிலுவை வாடகையை வசூலிப்பது, முறையான கணக்குகளைப் பராமரிப்பது ஆகிய பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.








