முதலமைச்சர் விஜய் குறித்த அவதூறு வழக்கு: ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் காவல்நிலையத்தில் ஆஜர்

முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆ. ராசா எம்.பி ஆகியோர் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.

சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் விஜய் அவதூறாகப் பேசியதாகக் கூறி, தமிழ்நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாகச் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆ. ராசா எம்.பி., முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து ஏழு பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று திமுக எம்.பி. ஆ. ராசா மற்றும் மா. சுப்பிரமணியன் ஆகியோருக்குச் சம்மன் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மா. சுப்பிரமணியன் ஆ.ராசா ஆகியோர் ஆஜராகியுள்ளனர். இதனால் சைதாபேட்டை காவல் நிலைய பகுதியில் திமுகவினர் திரண்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.