ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்காவிட்டால் தவெகவினருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவோம்: ரஜினி ரசிகர்கள் அறிவிப்பால் பரபரப்பு

தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, `ரஜினி மன வலிமை இல்லாதவர். திமுக மிரட்டலால், அவர் கட்சி ஆரம்பிக்காமல் சென்று விட்டார்’ என பேசியிருந்தார். சம்மந்தமே இல்லாமல், ரஜினி குறித்து அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜூனாவுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி நகர, ஒன்றிய ரஜினி ரசிகர்கள், திருச்செங்கோடு நகர் முழுவதும் ஆதவ் அர்ஜூனாவை கண்டித்து ஆங்காங்கே பேனர்களை வைத்துள்ளனர். இதுகுறித்து ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் ஐயப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், `கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, ரஜினி குறித்து அவதூறாக பேசி இருந்தார். இதற்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தோம். அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தோம். அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் தவெகவிற்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

திருச்செங்கோடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும், ரஜினி ரசிகர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அவர்களது குடும்பத்தினர் உள்ளனர். அவர்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக களம் இறங்குவார்கள்’ என்றார். ஆதவ் அர்ஜூனாவை கண்டித்து ரஜினி ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள் காரணமாக திருச்செங்கோடு நகர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.