மருந்துகளை வாங்குவதற்காக மக்கள் தங்கள் வீடுகளையும் நகைகளையும் விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவதாக நீதிபதி சந்தீப் மேத்தா வேதனை தெரிவித்திருந்தார்.
அவசரமாக மருந்து வாங்க வரும் நோயாளிகளின் உறவினர்களால் விலைகளை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று நீதிபதி விக்ரம் நாத் குறிப்பிட்டிருந்தார்.
ரூ.11,000 ஊசிக்கு ரூ.1.30 லட்சம்.. பகல் கொள்ளை
இந்த நிலையில், அதே வழக்கு நேற்று (அக்.27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சம்பவத்தை நீதிபதி சந்தீப் மேத்தா எடுத்துக்கூறினார்.
மருந்து விநியோகஸ்தர் ஒருவரின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குத் தேவைப்பட்ட கீமோதெரபி ஊசி குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்த மருந்து விநியோகஸ்தர், “நானே மருந்து விநியோகஸ்தர்தான். இந்த ஊசி எனக்கு ரூ.11,000-க்குக் கிடைக்கிறது. அதை வாங்கி வருகிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால், அவர் வாங்கிக் கொடுக்கும் ஊசியைப் பயன்படுத்த மறுத்த மருத்துவமனை, அதே மருந்துக்கு ரூ.1.30 லட்சம் கட்டணம் வசூலித்துள்ளது.
இந்தச் சம்பவத்தை விவரித்த நீதிபதி சந்தீப் மேத்தா, “இந்தக் கொள்ளையை எப்படி நியாயப்படுத்த முடியும்? இந்த அளவுக்கு விலை வித்தியாசம் ஏன்? இந்தப் பணம் எங்கே செல்கிறது?” என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினார்.
மத்திய அரசும் தனியார் மருத்துவமனைகளும் சொன்னது என்ன?
மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி ஆஜராகி வாதிட்டார். அப்போது, இந்தியாவில் மருந்துகளின் விலை பல நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாக இருப்பதாகவும், மருந்துகள் மக்களுக்குக் கட்டுப்படியான விலையில் கிடைப்பதுடன் ஆராய்ச்சி, தொழில் வளர்ச்சி, போட்டி உள்ளிட்ட அம்சங்களையும் கருத்தில் கொண்டு அரசு கொள்கைகளை வகுப்பதாகவும் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மருத்துவமனைகளை 24 மணி நேரமும் செயல்படுத்துவதற்கான மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்குப் பெரும் செலவு ஏற்படுவதாக விளக்கினார்.
வெளியில் இருந்து நோயாளிகள் வாங்கிவரும் மருந்துகளைப் பயன்படுத்துவதில் போலி மருந்துகள் தொடர்பான அபாயங்கள் இருப்பதாகவும் வாதிட்டார்.
ஆனால் மருத்துவமனைகளின் நிர்வாகச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக மருந்துகளின் விலையைப் பல மடங்கு உயர்த்துவதை நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்த 2013-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. இதன்படி தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) குறிப்பிட்ட மருந்துகளுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயிக்கிறது.
ஆனால் சந்தையில் விற்பனையாகும் மருந்துகளில் சுமார் 90 சதவீத மருந்துகளின் விலை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஏன் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ரூ.100 MRP கொண்ட மருந்து சில்லறை விற்பனையாளருக்கு ரூ.10 அல்லது ரூ.20-க்குக் கிடைப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
மக்களின் உயிர் தொடர்பான விவகாரத்தை வெறும் வணிகமாக அணுகக்கூடாது என்றும், உயிர்காக்கும் மருந்துகளின் விலை நிர்ணயத்தில் நோயாளிகளின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து மருந்துகளின் விலைக் கட்டுப்பாடு, மருந்து நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் லாப வரம்புகள் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த உச்சநீதிமன்றம், உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.