தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால் மின்னணு முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறை நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) இன்று (அக்டோபர் 26) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களை வாங்கும்போது எழும் தேவையற்ற புகார்களைத் தவிர்க்கவும், ரொக்கமாக அதிக அளவிலான பணத்தினைக் கையாளுவதைத் தவிர்க்கவும், நுகர்வோருக்கு ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவும் மின்னணு பரிவர்த்தனை முறையில் மட்டுமே பணம் செலுத்திட வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நவம்பர் 1 முதல் புதிய நடைமுறை
இதன்படி, நவம்பர் 1 முதல் ஒரு விற்பனையில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால் மின்னணு முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
அதேபோல, 2027 ஜனவரி 1 முதல் ஒரு விற்பனையில் ரூ.500-க்கு மேல் மதுபானம் வாங்கினாலும் மின்னணு முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
நுகர்வோர் எளிமையாக இணையவழி மதுபான முன்பதிவு முறையின் மூலமும் தொகையைச் செலுத்தி, கடைக்கு நேரில் வந்து மதுபானங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், நுகர்வோரின் புகார்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 889 2015 அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டாஸ்மாக் நிர்வாகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவுறுத்தல்கள்
2026 அக்டோபர் 26-ஆம் தேதி டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண் 09/2026-ல் கூறப்பட்டுள்ளதாவது:
- நவம்பர் 1 முதல் ஒரு விற்பனையில் ரூ.1,000-க்கு மேல் மதுபானம் வாங்கினால் UPI, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக மட்டுமே பணம் பெற வேண்டும். 2027 ஜனவரி 1 முதல் இந்த வரம்பு ரூ.500 ஆகக் குறைக்கப்படும்.
- தமிழகம் முழுவதும் உள்ள 4,048 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளிலும் மின்னணுப் பணப்பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- வாடிக்கையாளர்களிடம் ரொக்கமாகப் பணம் பெறுவதால் கடைகளில் அதிக அளவில் பணம் வைத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பணியாளர்களின் பாதுகாப்புக்கும் இடையூறு ஏற்படுகிறது.
- ரொக்கப் பரிவர்த்தனையில் கள்ள நோட்டுகள், பணப் பற்றாக்குறை, கணக்கு வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட (MRP) கூடுதல் தொகை வசூலிப்பதாகப் புகார்கள் வருவதால், மின்னணுப் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும்.
- மின்னணுப் பரிவர்த்தனையில் பெறப்படும் தொகை நேரடியாக டாஸ்மாக் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதனால் ரொக்கப் பணத்தைக் கையாள்வது குறையும்.
- நவம்பர் 1-க்கு முன்பே அனைத்துக் கடைகளிலும் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட, செயல்படும் நிலையில் உள்ள POS இயந்திரங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- பழுதடைந்த POS இயந்திரங்களைச் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பப் பணியாளர்கள் மூலம் சரிசெய்ய வேண்டும் அல்லது மாற்று இயந்திரங்களைப் பெற வேண்டும்.
- மின்னணுப் பரிவர்த்தனைகளை டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட POS இயந்திரங்கள் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
- புதிய நடைமுறையைச் செயல்படுத்தத் தவறும் பணியாளர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படு.
- மாவட்ட மேலாளர்கள் இந்த அறிவுறுத்தல்களை அனைத்து விற்பனைக் கடைப் பணியாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.
- புதிய நடைமுறை குறித்த அறிவிப்புப் பலகையை (2 அடி × 3 அடி) அனைத்துக் கடைகளிலும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்க வேண்டும்