ஆலங்குளம், அக். 1:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கொடை விழா, தசரா விழா சுவாமிகள் ஊர்சுற்றுதல் நிகழ்ச்சியுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை முத்தாரம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் பெண்கள் பங்கேற்ற 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
திங்கள்கிழமை காலை 9 மணிக்கு கோமாதா பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஆலங்குளம் ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியுடன் சாம பூஜையும் நடைபெற்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணிக்கு பூக்குழி இறங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் காலை 11 மணிக்கு ஆலங்குளம் காய்கறி மார்க்கெட்டில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் மற்றும் நேர்த்திக்கடன் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.
பகல் 12 மணிக்கு முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கும் பரிவார தேவதைகளுக்கும் உச்சிகால பூஜை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 7 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 8 மணிக்கு முளைப்பாரி மற்றும் ஆயிரங்கண் பானை நேர்த்திக்கடன் நிகழ்ச்சியுடன் தசரா குழு சுவாமிகள் ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாம பூஜையும், அதிகாலை 1 மணிக்கு முத்தாரம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மஞ்சள் நீராடுதல், கும்மிப்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு கொடை விழா நிறைவு பெறுகிறது.
கொடை விழாவையொட்டி ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாரம்மனை வழிபட்டு வருகின்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி மற்றும் முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.






