பரமக்குடி அரசு மருத்துவமனையில் சண்டையை விலக்கச் சென்ற பெண் ஏட்டு தள்ளி கொலை

பரமக்குடி: பரமக்குடி அரசு மருத்துவமனையில் சண்டையிட்ட இளைஞர்களை தடுக்கச் சென்ற பெண் ஏட்டு தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரக போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள பார்த்திபனூர் காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் கண்ணகி (35). இவர் நேற்று இரவு, பரமக்குடி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது, வெளியில் சண்டையிட்டு காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர்.

அங்கு இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டதை பெண் காவலர் கண்ணகி தடுத்துள்ளார். சண்டையை விலக்க வந்த பெண் காவலர் கண்ணகியை, கருப்புராஜா என்ற இளைஞர், கீழே தள்ளி விட்டுள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் கண்ணகிக்கு, தலையில் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி சந்தீஷ், பரமக்குடி டிஎஸ்பி சுகுமாரன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய கருப்புராஜாவை தேடி வருகின்றனர்.