நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணத்தில் வசித்து வருபவர் மதுமிதா (28). பிரபல யூடியூபர் ஆவார். இவரது கணவர் வினோத்குமார் (33). ஏலக்காய் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். யூடியூபரான மதுமிதா தனது வீட்டில் உள்ள பணம், நகைகளை காட்டி ஏராளமான ரீல்ஸ் வெளியிட்டு வந்த நிலையில் கடந்த 24ம்தேதி இவர், குடும்பத்துடன் ஷாப்பிங் சென்றதை பயன்படுத்தி வீட்டின் பின் பக்க கதவை உடைத்து புகுந்து 118 பவுன் தங்க நகைகள், 5 கிராம் வைர நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து தற்போது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுமிதா வீட்டு அருகில் இருந்த ஒரு கேமராவில் மதுமிதாவும், அவரது கணவரும் வெளியே சென்ற சிறிது நேரத்தில், பைக்கில் வாலிபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி அந்த பகுதிக்கு வரும் காட்சிகளும், மதுமிதாவின் வீட்டுக்கு பின்புறம் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
118 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த பின், மதுமிதாவின் வீடியோக்களை பார்வையிடும் நபர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 10 லட்சத்தை கடந்துள்ளது. அவரை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை 4.50 லட்சமாக உயர்ந்துள்ளது. கொள்ளை சம்பவத்துக்கு பின் நேற்று முன்தினம் 6 வீடியோக்களை புதிதாக மதுமிதா பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்த வீடியோக்களிலும் பணத்தை அள்ளி வீசி பதிவிட்டு உள்ளார். குழந்தையின் மீதும் பணத்தை அள்ளி கொட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். குழந்தைக்கு காலாண்டு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல போகிறோம் என்றும் வீடியோ வெளியிட்டுள்ளார். 24 மணி நேரத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் அவரது வீடியோவை பார்த்துள்ளனர்.






