ஜகதல்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கடந்த இரண்டு நாட்களில் சுமார் 5,000 மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பஸ்தர் மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய 16 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பஸ்தர், துர்க், ராய்பூர் மற்றும் தம்தரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 43 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வெள்ளப் பெருக்கில் சிறுவர்கள் உட்பட பலர் மாயமாகியுள்ள நிலையில், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அமைச்சர் தங்ராம் வர்மா பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கினார்.






