சேரன்மகாதேவி, செப். 22:
நெல்லை மாவட்டம், இடையன்குளம் அருகே உள்ள எரிக்கலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்து 13 வாரங்கள் சிறப்பு ஜெபம் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறார்கள் கலந்து கொண்டு புனித அந்தோணியாரை வழிபட்டனர்.
எரிக்கலம்பட்டி பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியாரை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பக்தர்களின் பங்களிப்புடன் கடந்த 1997-ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.
கொரோனா காலத்திற்குப் பின்னர் ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை குறைந்ததுடன், சில ஆண்டுகள் உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் ஆலயம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சேரன்மகாதேவியைச் சேர்ந்த ஜி. மைக்கேல் என்பவரின் கவனத்திற்கு இந்த ஆலயத்தின் நிலை வந்தது.
அவரது தலைமையில் ஆலயத்தை புதுப்பித்து, பக்தர்கள் மீண்டும் வந்து வழிபடும் வகையில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆலயத்தில் தொடர்ந்து 13 வாரங்கள் சிறப்பு ஜெப நிகழ்ச்சிகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
ஒவ்வொரு வாரமும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று, புனித அந்தோணியாரை பக்தியுடன் வழிபட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு இரவு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த திருத்தலத்தில் பக்தியுடன் வேண்டிக்கொள்ளப்படும் வேண்டுதல்கள் நிறைவேறி வருவதாகவும், பில்லி சூனியம் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
புதுப்பிக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயத்தில் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று ஜி. மைக்கேல் தெரிவித்தார்.






