டெல்லி: வாக்காளர் உரிமைகளை நீர்த்துப்போக செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று காக்ரோச் ஜனதா பார்ட்டி வலியுறுத்தி உள்ளது. 48 மணி நேரத்திற்குள் அவர் பதவி விலகாவிட்டால், “ஜந்தர் மந்தர் 2.0” உள்ளிட்ட நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் CJP கட்சி எச்சரித்து உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய CJP நிறுவனர் அபிஜீத், தேர்தல் ஆணையத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் தேர்தல் செயல்முறை முறைகேடாக நடத்தப்பட்டிருக்கிறது; குடிமக்களிடமிருந்து வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்கிறோம் என்ற பெயரில், சுமார் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக CJP குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு தார்மீக பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 48 மணி நேரத்திற்குள் பதவி விலகாவிட்டால், நாங்கள் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்குவோம். தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) பதவி விலகாவிட்டால் “ஜந்தர் மந்தர் 2.0” போராட்டம் நிச்சயமாக நடைபெறும் என்றும் குறிப்பிட்டார். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால், டெல்லி ஜந்தர் மந்தரில் சமீபத்தில் நடத்தியதை விட மிகப் பெரிய அளவிலான மாணவர் மற்றும் இளைஞர் போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்துவோம் என்று CJP நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில், அதன் கட்டமைப்பை மாற்றி அமைக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் சிஜேபி அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து பிரசாரத்தை மேற்கொண்ட முன்னாள் முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், பினராய் விஜயன், மம்தா பானர்ஜி என ஒவ்வொருவராக தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்னர், இது தற்செயல் நிகழ்வு போல தெரியவில்லை, இதன் பின்னால் ஒரு பேட்டர்ன் தென்படுகிறது என அபிஜித் தீப்கே குற்றம்சாட்டி உள்ளார்.






