சென்னை: நடிகை ராதாவின் குற்றச்சாட்டுகளுக்கு அவரது அக்காவும் நடிகையுமான அம்பிகா, கண்ணீர் மல்க நேற்று பேட்டியளித்தார். நடிகை அம்பிகா தன்னிடம் ரூ. 46 கோடி மோசடி செய்துவிட்டதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார் அவரது தங்கையும் நடிகையுமான ராதா. மேலும் அக்கா என்று நம்பினேன். ஆனால் இப்படி செய்துவிட்டார் என செய்தியாளர்களிடம் கண்ணீர்விட்டார் ராதா.
என் வீட்டில் நான் இல்லாத நேரத்தில் எனது காசோலைகளை எடுத்து அதுவும் ரூ. 46 கோடியை தன் பெயரில் டெபாசிட் செய்யச் சொல்லியிருக்கிறார் அம்பிகா என்பதுதான் ராதாவின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில் ராதா புகார் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் அம்பிகா. செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: எங்களின் ஏ.ஆர்.எஸ் கார்டன் விற்பனைக்கு இல்லை. ஏ.ஆர். எஸ். கார்டனின் பெயரை மாற்றி புது போர்டு வைத்திருக்கிறார்கள். ஒரு சட்ட பிரச்சனை போய்க் கொண்டிருக்கிறது. அதனால் அது குறித்து விபரமாக என்னால் பேச முடியாது.
குடும்பத்தில் பிரச்னை வந்தால் அதை நான் வெளியே சொல்வது இல்லை. ராதா புகார் குறித்து விசாரணைக்கு வரும்போது விளக்கம் கேட்டால் கொடுத்துவிட்டு அதன் பிறகு மக்களுக்கு விவரமாக தெரிவிக்கிறேன். அந்த இடம் தொடர்பாக சட்ட பிரச்சனை நடந்து வருகிறது. ஏ.ஆர். எஸ். கார்டன் போர்டு மாற்றப்பட்டதை பார்த்து என்னால் தாங்க முடியவில்லை என்று தொடர்ந்து பேச முடியாமல் அழுதார் அம்பிகா. பின்னர் பேசும்போது, ஏ.ஆர்.எஸ். கார்டனின் மெயின் ஃபவுன்டேஷன் நான் தான். இதை எம்ஜிஆர் எங்களுக்கு கொடுத்தது என்பது பொய்.
எனது உழைப்பில் நான் வாங்கிய சொத்து இது. ஆனால் இந்த சொத்திலிருந்து எனது பெயரை நீக்கிவிட்டார்கள். என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நான் என்ன செத்தா போய்விட்டேன்? தங்கம் என்றால் ராதாவுக்கு அதிக இஷ்டம். அதனால் எனது தங்கம் அனைத்தையும் அவர்தான் வைத்திருக்கிறார். சொத்து பிரச்னைக்காக, ராதாதான் என்னிடம் செக் தந்தார். அது பவுன்ஸ் ஆகிவிட்டது. சட்டப்படி நான்தான் அவர் மீது வழக்கு தொடுக்க வேண்டும்.
நான் உண்மைகளை சொன்னால் ராதா சிறைக்க செல்ல நேரிடும். எனது இன்ஸ்டாகிராமில் ‘படிக்காதவன்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த பாடலான, ‘பணங்காச கண்டுபுட்டா புலி கூட புல்லை தின்னும்’ என்ற பாடலை வைத்தேன். அது ராதாவை குறிப்பிட்டுதான் நான் பதிவிட்டேன். குடும்பம், உறவுகள் இருந்தால் போதும் எதையும் எதிர்கொள்ளலாம் என நினைத்த காலம் போய்விட்டது. ஆனால் தற்போது பணம் தான் எல்லாம். உன்னால் தான் (ராதாவால்) நான் சினிமாவுக்கு வந்தேன்.
அதற்காக நான் ஏன் உன்னை நினைக்கணும் என்று தோன்றுகிறது. நன்றி உணர்வு, சென்டிமென்ட் எல்லாம் போய்க் கொண்டிருக்கிறது. நான் எப்பொழுதும் ஜாலியாக இருக்கும் ஆள். முதல் முறையாக இப்படி கண்ணீர்விட்டுவிட்டேன். நான் ஏ.ஆர்.எஸ்.கார்டனை விற்க மாட்டேன், விற்பனை செய்யவும் விட மாட்டேன். ஏமாற்றப்பட்ட நான்தான் புகார் தந்திருக்க வேண்டும். என் மீது புகார் என்றால் ராதாவுக்கு வேண்டாம் என பலரும் அட்வைஸ் செய்திருப்பார்கள். இந்த புகார் வேடிக்கையாக இருக்கிறது. என் மீது புகார் அளித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.
காசோலை விவகாரம் மற்றும் சொத்து தொடர்பான வழக்குகள் ஏற்கனவே நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது, காவல் நிலையத்திற்குச் சென்று எனக்கு அவப்பெயர் உண்டாக்க ராதா நாடகம் ஆடுகிறார். ராதா தனது கைப்பையையே எப்போதுமே பூட்டி வைக்கும் குணம் கொண்டவள், அவளது வீட்டிலிருந்து நான் எப்படிச் செக்குகளைத் திருட முடியும்? ராதாவின் மகள் திருமணத்தில் வேலைக்காரி போல் வேலைகள் இழுத்துப்போட்டு செய்தேன். அதையெல்லாம் அவர் நினைத்து பார்ப்பாரா? ராதாதான் எனக்கு 97 கோடி ரூபாய் வரை தர வேண்டும்.
மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும் போதும் என நினைக்காத ஒரு விஷயம் பணம் தான். நானும், தங்கையும் ஒரே மாதிரி தான் உடை அணிந்தோம். ஒற்றுமையாக இருந்த சகோதரிகள் இடையே பிரச்சனை வர பணம் தான் காரணம். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுள் உதவி செய்வார். இவ்வாறு அம்பிகா கூறினார்.






