ஆலங்குளம், செப்.21:
தென்காசி மாவட்டம் கீழ ஆம்பூரில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் நிதியுதவியுடன், ஏ.ஜே.கே. அக்குபஞ்சர் அண்ட் ஹோமியோபதி கிளினிக் மற்றும் கீழ ஆம்பூர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவப் பரிசோதனை மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
கீழ ஆம்பூர் கோகுல் மஹாலில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமிற்கு, கீழ ஆம்பூர் சமூக ஆர்வலர்கள் அறக்கட்டளை நிறுவனர் பசுமை ப.மு. கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.
முகாமை ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், கண் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. மேலும், அக்குபஞ்சர் சிகிச்சை மற்றும் அதன் பயன்கள் குறித்தும் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முகாமில் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பரமசிவன், கிராம நிர்வாக அலுவலர் எஸ். முருகன் மற்றும் ஆனந்த கிருஷ்ணன், லோகேஸ்வரி, மாணிக்கம், மணிகண்டன், ராஜா சுப்பிரமணியன், வீரமணிகண்டன், மகேஷ், திருமலைகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலவச மருத்துவ முகாமில் கீழ ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனர். பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த முகாமை ஏற்பாட்டாளர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.






