கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி
உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு
அம்பை, செப். 21:
திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் உலக தூய்மை தினத்தை முன்னிட்டு, கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ரயில் நிலைய வளாகம், தண்டவாளப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நீண்ட நாட்களாக தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. குறிப்பாக, ரயில் பயணிகளால் தண்டவாளப் பகுதிகளில் வீசப்பட்டிருந்த ஏராளமான பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டன.
இந்நிகழ்வுக்கு கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் விஸ்வநாதன் வரவேற்றார்.
தூய்மைப் பணியில் சங்க நிர்வாகிகள் அப்துல் சமது, சீதாராமன், மோகன், ஜான் ஞானராஜ், முகமது ஷரீஃப், அபுல் ஹசன், ரசாக், ஒளி மாலிக், நாலாயிரம், தானிஷ், ஷாகித் மைதீன், வீரப்பபுரம் கார்த்திக் உள்ளிட்டோர் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களும் இணைந்து ரயில் நிலைய வளாகம் மற்றும் தண்டவாளப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.
ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்தும், ரயில் பயணிகள் குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல், அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தூய்மையாக பராமரிக்கும் நோக்கில் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி உலக தூய்மை தினத்தை முன்னிட்டு ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு






