சுயமரியாதை இயக்கம் தோன்றக் காரணமான சேரன்மகாதேவி மண்ணில் பல்வேறு கட்சியினர் மரியாதை
சேரன்மகாதேவி, செப். 17:
சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்த சேரன்மகாதேவி மண்ணில், தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள் விழா பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பெரியார் இயக்கங்களின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சேரன்மகாதேவி இந்தியன் வங்கி எதிர்ப்புறம் ஆண்டுதோறும் பெரியாரின் பிறந்த நாள் விழா சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இவ்வாண்டும் பெரியாரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பெரியார் இயக்கங்கள், திராவிடர் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், மக்கள் கலை இலக்கியக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக), எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பகுஜன் சமாஜ் கட்சி பொருளாளர் எம். சிவராஜ், அம்பை செயலாளர் எஸ். ரவீந்திரன், திராவிடர் கழக சேரை ஒன்றியச் செயலாளர் செல்வசுந்தரசேகர், மாவட்ட இளைஞரணி தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளர் கருணாநிதி, மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த பெரியார் பித்தன், மதிமுக ஒன்றியச் செயலாளர் குட்டி பாண்டியன், 13-வது வார்டு கவுன்சிலர் அணி, ராஜேஷ்வரன், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த சிந்தா கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்திய தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா, அவரது சிந்தனைகளை நினைவுகூரும் வகையில் சேரன்மகாதேவியில் நடைபெற்றது.






