பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வாகன ேசாதனையில் காரில் கடத்திய ரூ.1.17 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் வழியாக தென்மாவட்டங்களுக்கு விற்பனைக்காக 2 கார்களில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து பெரம்பலூர் எஸ்பி லலித்குமார் உத்தரவின் பேரில் பெரம்பலூர் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு பெரம்பலூர் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த 2 கார்களை மடக்கினர். போலீசாரை பார்த்தவுடன் காரை ஓரமாக நிறுத்துவதுபோல் சற்று தூரமாக சென்று ஒரு காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து 3 பேர் தப்பி சென்றனர். மற்றொரு காரை போலீசார் மடக்கினர். அப்போது 2 கார்களின் உள்ளே கஞ்சா பொட்டலங்கள் கட்டுக்கட்டாக இருந்தது. ரூ.1 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 235 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
மற்றொரு காரில் பிடிபட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில், சென்னை செனாய்நகர், பரமேஸ்வரி நகரை சேர்ந்த ஹரி மகன் அருண்குமார் (31), திருவள்ளூர் மாவட்டம் வயலூர், துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேதுராமன் மகன் பிரதீப் (23), கும்மிடிப்பூண்டி, கும்பிலி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த குணா மகன் விக்னேஷ் (27) என்பதும், தப்பி ஓடியவர்கள் சென்னையை சேர்ந்த தீனா (எ) தினகரன், தேவராஜ் மற்றும் பெரம்பலூரை சேர்ந்த தமிழ்வேந்தன் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 235 கிலோ கஞ்சாவுடன் 2 கார்களை பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து அருண்குமார், பிரதீப், விக்ேனஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






