கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை மாநாட்டில் திருமாவளவனை கொல்ல செயற்கையான கூட்ட நெரிசல் ஏற்படுத்தப் பட்டதாக கள்ளக்குறிச்சி எஸ்பியிடம் விசிக நிர்வாகிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆவன மைய மாவட்ட அமைப்பாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி எஸ்பி ஷஹ்னாஸிடம் நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி தலைமையில் கடந்த 17ம் தேதி உளுந்தூர்பேட்டையில் தமிழ் தேசிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு மேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின்போது தலைவர் திருமாவளவனை கூட்டநெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் உரையை 30 நிமிடத்திற்குள் முடித்துவிட்டு, மேடைவிட்டு வெளியேறும்போது தலைவருக்கு முன்னிருந்த ஒருவர் மாநாட்டு மேடையைவிட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளார்.
அதேசமயம் தலைவருக்கு பின்னால் இருப்பவர் ஒருவர், தலைவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும், இடுப்பிற்கு கீழ், கால் முட்டிக்கு பின்புறப்பகுதியில் தலைவரின் மீது முகம் தெரியாத அந்த நபர் அவரது கால்முட்டியால் பலமுறை இடித்து தாக்கும் செயலும் அந்த நபரின் வயிற்றால் முட்டித்தள்ளும் செயலும் வீடியோ பதிவில் தெளிவாக தெரிகிறது.
அவ்வாறு தலைவரின் பின்புறத்தில் காலில் தாக்குவது என்பது எங்கள் தலைவரை தடுமாறி கீழே விழவைத்து நிலைகுலைய செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி தலைவர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த இவ்வாறு தாக்குதலை நடத்தினார்களா என்ற சந்தகேம் எழுந்துள்ளது.
இதை பார்க்கும்போது கரூர் கூட்ட நெரிசல் விபத்தை மாடலாக வைத்து யாரோ திருமாவளவனை திட்டமிட்டு கொல்ல செயற்கையான ஒரு கூட்ட நெரிசலை மேடையின் மீது உருவாக்கியதினால் அப்படி ஒரு சம்பவம் நடத்தேறியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






