தமிழ் ஆர்வலர்கள், இளைஞர்கள் திரளாக பங்கேற்பு
நெல்லை, ஆக. 25:
பாப்பாக்குடி பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் மாதாந்திர கூட்டம், மு. விசுவநாதன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பேரவையின் நிறுவனர் பாப்பாக்குடி அ. முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். முன்னதாக விவேகானந்தர் கேந்திர பாலர் பள்ளி ஆசிரியைகள் மா. விஜயலட்சுமி, ச. சுப்புலெட்சுமி ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.
மு. ராசதுரை முன்னிலை வகித்தார். தொடர்ந்து, “சிந்தனைக்கு ஒரு குறள்” என்ற நிகழ்வில் சேவைச் செம்மல் ச. இலட்சுமணன் திருக்குறள் கருத்துகளை வழங்கினார். அகவை முதிர்ந்த தமிழறிஞர் ரெ. துரைராஜ் கம்பர் கவியமுதம் வழங்கி சிறப்பித்தார்.
கல்லூரி மாணவி மு. பேச்சியம்மாள் இந்து சிற்றுரை நிகழ்த்தினார். தொடர்ந்து கவிஞர்கள் வீரை ஆ. இராஜேந்திரன், பிரம்மதேசம் பு. அருமைராஜ், பேட்டை த. சந்தனக்குமார், கோ. முத்துக்குமார் ஆகியோர் கவிதைகள் வழங்கி, விழாவில் இலக்கியச் சிறப்பை ஏற்படுத்தினர்.
“வள்ளுவரின் அறமும், பாரதியின் மறமும்” – சிறப்புரை
நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக திருநெல்வேலி தச்சநல்லூரைச் சேர்ந்த கவிதாயினி பி. கோமதி கிருஷ்ணமூர்த்தி, “வள்ளுவரின் அறமும், பாரதியின் மறமும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் திருவள்ளுவரின் அறநெறிகளும், மகாகவி பாரதியின் துணிச்சல், விடுதலை உணர்வு மற்றும் சமூக சிந்தனைகளும் இன்றைய தலைமுறைக்கு எவ்வாறு வழிகாட்டுகின்றன என்பது குறித்து எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து கல்லிடை திருவருள் லத்தீப், அருள்நிதி சு. கோபாலகிருஷ்ணன், முக்கூடல் பொறியாளர் க. ரவிச்சந்திரன், த.அ.போ.க. பணிநிறைவு பெற்ற துணை மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியை பொறியாளர் ந. தங்கமாரி தொகுத்து வழங்கினார். நிறைவாக சி. சீதாராமன் நன்றியுரை ஆற்றினார்.
தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டை வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏராளமான தமிழ் ஆர்வலர்களும் இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து இதுபோன்ற இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் இளம் தலைமுறையினரிடம் தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை வளர்க்க வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.






