சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சாக்கடை நீர் தேக்கம்!

பெண்கள் உள்நோயாளிகள் பிரிவில் கொசுத்தொல்லை அதிகரிப்பு – அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என தலைமை மருத்துவர் ஆதங்கம்

சேரன்மகாதேவி, ஆக.31:

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பெண்கள் உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதிக்கு அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் பெண்கள் உள்நோயாளிகள் பிரிவின் இடதுபுற பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மருத்துவமனையின் பின்புறம் உள்ள கழிவுநீர் ஓடை வழியாக வெளியேறி, பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள கண்ணடியான் கால்வாய் பகுதியில் இணையும் வகையில் உள்ளது.

தற்போது சேரன்மகாதேவி பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் மற்றும் கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால், கழிவுநீர் செல்லும் ஓடை பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக வெளியேற முடியாமல் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் பாசி மற்றும் பல்வேறு கழிவுகள் தேங்கியுள்ளதுடன், துர்நாற்றமும் வீசுவதாக நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தேங்கி நிற்கும் கழிவுநீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, பெண்கள் உள்நோயாளிகள் பிரிவில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, டெங்கு காய்ச்சல் தொடர்பாக சிலர் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்திலேயே கழிவுநீர் தேங்கி கொசுக்கள் பெருகும் சூழல் ஏற்பட்டிருப்பது நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை

இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரிடம் கேட்டபோது, “இந்த பிரச்சினை தொடர்பாக சப்-கலெக்டரிடமும், பேரூராட்சி தலைவியிடமும், பேரூராட்சி அலுவலகத்திலும் பலமுறை தெரிவித்துள்ளோம். கழிவுநீர் தேங்குவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் தொடர்ந்து எடுத்துக் கூறி வருகிறோம். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது” என்று ஆதங்கத்துடன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மருத்துவமனை என்பது நோயாளிகள் சிகிச்சை பெற்று உடல்நலம் பெறுவதற்கான இடமாகும். அங்கு கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் நீடிப்பது நோயாளிகளின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, சேரன்மகாதேவி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மருத்துவமனையின் கழிவுநீர் ஓடையை நேரில் ஆய்வு செய்து, ஏற்பட்டுள்ள அடைப்பை உடனடியாக அகற்றி, கழிவுநீர் தடையின்றி வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மருத்துவமனைக்குள் கழிவுநீர் மீண்டும் புகாத வகையில் நிரந்தரத் தீர்வு காண்பதுடன், தற்போது தேங்கியுள்ள பாசி மற்றும் கழிவுகளை அகற்றி, கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என நோயாளிகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.