நெல்லை: நெல்லையில் அரசு பஸ் டிஜிட்டல் பெயர் பலகையில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என மாற்றி சமூக வலைதளங்களில் பரப்பிய ஹேக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுக்க அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்டத்தின் சார்பில் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் என 3 மண்டலங்கள் மூலம் 1950 பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு பஸ்களில் டிஜிட்டல் போர்டு பெரும்பாலான பஸ்களில் உள்ளது.
சட்டமன்ற தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. இதற்கு 10 நாட்களுக்கு முன்பு சேரன்மகாதேவி பணிமனையில் இருந்து நெல்லை சந்திப்பு – வீரவநல்லூர் கரிசூழ்ந்தமங்கலத்துக்கு இயக்கப்பட்ட ‘7 டி’ அரசு பஸ்சின் டிஜிட்டல் போர்டை ஹேக் செய்த விஷமிகள் சிலர் சட்டவிரோதமாக ‘தமிழக வெற்றிக் கழகம்’ என மாற்றியுள்ளனர். இதைப்பார்த்து சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதோடு தவெக பிரசார பாடலை இணைத்து சமூகவலைதளத்தில் வைரலாக்கியுள்ளனர்.
தேர்தல் பிரசாரத்திற்காக அரசு பஸ்சின் அறிவிப்பு பலகையை மாற்றி சமூக வலைதளங்களில் பரவ விட்டதால் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், டிஜிட்டல் பெயர் பலகை தயாரித்து வழங்கும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இது எப்படி சாத்தியம் என விசாரித்துள்ளனர். அதற்கு, ஹேக்கர்கள் ‘வைபை’ மூலம் டிஜிட்டல் போர்டை மாற்றி அமைக்க வாய்புள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.






