நெல்லையில் 4 சிறுமிகள் வன்கொடுமை: மத போதகருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி!

நெல்லை: நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் 4 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை செய்த மத போதகருக்கு மரண தண்டனை விதித்து, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். மத போதகரான இவர், அப்பகுதியில் சேவை செய்து வந்துள்ளார். மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் சென்று சேவை செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு சேவை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் உட்பட 4 சிறுமிகளை மத போதகர் ஆபிரகாம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்துச் சிறுமிகள் அளித்த தகவலின் அடிப்படையில், அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட ஊரக உட்கோட்ட மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் அடிப்படையில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.தொடர்ந்து, நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, சாட்சிகள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை இன்று முடிவடைந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத போதகர் ஆபிரகாம் மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.