சேரன்மகாதேவியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மாற்றத்திற்கான வாழ்வியல் பரப்புரை பயணம்” ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை – தடையை உடைப்போம் என வலியுறுத்தி பிரச்சாரம்

சேரன்மகாதேவியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் “மாற்றத்திற்கான வாழ்வியல் பரப்புரை பயணம்”

ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை – தடையை உடைப்போம் என வலியுறுத்தி பிரச்சாரம்

சேரன்மகாதேவி, ஆக. 9:திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடத்தப்பட்டு வரும் “ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை – தடை அதை உடை” என்ற முழக்கத்துடன் கூடிய மாற்றத்திற்கான வாழ்வியல் பரப்புரை பயணம் இன்று சேரன்மகாதேவியை வந்தடைந்தது.

சமூகத்தில் நிலவி வரும் சாதிய வேறுபாடுகள், மதத்தின் பெயரால் நிலவும் பார்ப்பனிய சிந்தனைகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பரப்புரை பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி, நாகர்கோவில், பேராவூரணி ஆகிய மூன்று முனைகளில் இருந்து புறப்பட்ட பரப்புரை பயணக் குழுவினர் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து சமூக மாற்றம், சாதி ஒழிப்பு, பகுத்தறிவு மற்றும் மூடநம்பிக்கை எதிர்ப்பு குறித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று சேரன்மகாதேவி பழைய பேருந்து நிலையத்திற்கு பரப்புரை பயணம் வந்தடைந்தது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழக சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் சேகர், பகுஜன் சமாஜ், கட்சி பொருளாளர் சிவராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அழகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரப்புரை பயணக் குழுவினரை வரவேற்றனர்.

பரப்புரை பயணத்தின் பிரச்சார செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், பயணக்குழுவைச் சேர்ந்த கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பால்வண்ணன் மற்றும் கலை நிகழ்ச்சி பாடகர் சித்திரை சேனன் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடையே கருத்துகளை எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதன் அவசியம், சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்தல், மதத்தின் பெயரில் நிலவும் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்தல், அறிவியல் சிந்தனையை வளர்த்தல், மூடநம்பிக்கைகளை ஒழித்தல் உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்கள் மூலம் சமூக மாற்றத்திற்கான கருத்துகளும் பரப்பப்பட்டன.

மூன்று முனைகளில் இருந்து தொடங்கிய இந்த பரப்புரை பயணம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. இறுதியாக காரைக்குடியில் பயணம் நிறைவடைந்து மாநாடு நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

சமூகத்தில் நிலவும் சாதி, மதம் சார்ந்த பாகுபாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்களிடையே பகுத்தறிவு சிந்தனையை வளர்ப்பதே இந்த பரப்புரை பயணத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.