திருச்சி 25வது வார்டில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பூங்கா பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாநகராட்சியில் கவுன்சிலர் நாகராஜ் மனு

திருச்சி, ஜூலை 22:
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 25வது வார்டு சண்முகா நகரின் 10வது குறுக்குத் தெருவில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.60 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், அந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அப்பகுதி பொதுமக்கள் பூங்காவின் பயனைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இடைநிறுத்தப்பட்டுள்ள பூங்கா பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கி விரைந்து நிறைவு செய்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனை முன்னிட்டு, 25வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
பூங்கா பணிகளை விரைந்து நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.