வாக்கு சதவீதம் எதுவும் மாறவில்லை தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி: திருமாவளவன் பேட்டி

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டு சென்றார். அப்போது அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக தேர்தலில் வழக்கமான வாக்குப்பதிவு தான் நடந்துள்ளது. இதில் வியப்படைவதற்கு ஒன்றும் கிடையாது. வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் சிறப்பு திருத்தம் மூலம் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த வாக்குகள் நீக்கம் செய்யப்படாமல் இருந்து வாக்குப்பதிவு நடந்து இருந்தால், பழைய மாதிரியே வாக்குப்பதிவு நடந்து இருக்கிறது என்று நாம் பேசி இருப்போம்.

ஆனால் சிறப்பு எஸ்ஐஆர் திருத்தம் மூலம், வாக்குப்பதிவு செய்யப்படாமல் எண்ணிக்கையில் மட்டும் இருந்த லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் கூடுதலாக வாக்குப்பதிவு ஆகி இருப்பது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது. இது உண்மை இல்லை. ஒவ்வொரு 5 ஆண்டு தேர்தலுக்கு பின்பும் புதிய வாக்காளர்கள் 20 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இணைவார்கள். அது எண்ணிக்கையில் கூடுதலாக சேரும். இந்த தேர்தலில் 20 லட்சம் முதல் 25 லட்சம் வரை புதிய வாக்காளர்கள் சேர்ந்து உள்ளனர். அவர்கள் போட்ட வாக்குகள்தான் கூடுதலாகி உள்ளன. இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழக்கமாக நடப்பது தான். இதில் புதிது எதுவும் இல்லை.

இந்த தேர்தலில் மீண்டும் திமுக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும். இதை களத்தில் மக்களை நேரடியாக சந்தித்த அனுபவத்தில் இருந்து உணர்கிறோம். தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று நான் எப்போதும் சொல்லவில்லை. தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழல் மாறும் என்றுதான் சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, விஜய் வாங்குகிற வாக்குகள் சதவீதத்தை பொறுத்து, தமிழக அரசியல் சூழல் மாறும் என்ற பொருளில் சொல்லி இருந்தேன். தேர்தல் முடிவு வரட்டும். அதன் பின்பு பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.