எரிக்கலைபட்டி புனித அந்தோனியார் ஆலயம் புதுப்பிப்பு; சிறப்பு ஜெப நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
சேரன்மகாதேவி, ஜூலை 02:
இடையன்குளம் அருகே உள்ள எரிக்கலைபட்டி கிராமத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு சிறப்பு ஜெப வழிபாட்டுடன் மீண்டும் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு எரிக்கலைபட்டியில் சிறிய ஓலைக்குடிசையில் புனித அந்தோனியாரை வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அக்காலத்தில் இருதயராஜ் (86) என்பவர் ஆலயத்தை பராமரித்து பக்தர்களின் வழிபாட்டை முன்னெடுத்து வந்துள்ளார்.
பின்னர், பக்தர்களின் ஒத்துழைப்புடன் 1997 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயம் 1997 மே 9ஆம் தேதி தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு S.T.அமல்நாதர் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது. அப்போது நாங்குநேரி பங்குத்தந்தை அருள்தந்தை S.ஜெரால்டு அவர்களும் உடனிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கொரோனா காலத்திற்குப் பிறகு ஆலயத்திற்கு பக்தர்கள் வருகை குறைந்ததுடன், சில ஆண்டுகள் பராமரிப்பு இன்றி இருந்தது. இதையடுத்து சேரன்மகாதேவி G. மைக்கேல் என்பவர் தலைமையில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் பக்தர்கள் வழிபட ஏற்ற வகையில் சீரமைக்கப்பட்டது.

புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 13 வாரங்களாக தொடர்ந்து ஜெப நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்றார் ஜூன் 30ஆம் தேதி சிறப்பு ஜெப வழிபாடு நடைபெற்றது. இதில் சேரன்மகாதேவி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறார்கள் திரளாக கலந்து கொண்டு புனித அந்தோனியாரை வழிபட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு இரவு உணவும் வழங்கப்பட்டது. இந்த திருத்தலத்தில் பக்தியுடன் வேண்டினால் வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும், பில்லி, சூனியம் உள்ளிட்ட பாதிப்புகளிலிருந்து நிவாரணம் கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். புதுப்பிக்கப்பட்டுள்ள புனித அந்தோனியார் ஆலயம் மீண்டும் பக்தர்களின் ஆன்மிக மையமாக திகழத் தொடங்கியுள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.






