சேரன்மகாதேவி பேரூராட்சியில் அதிகாரிகள் அலட்சியம்? – ஆய்வுக்குச் சென்ற நலக்குழு உறுப்பினர்கள் அதிருப்தி

சேரன்மகாதேவி பேரூராட்சியில் அதிகாரிகள் அலட்சியம்? – ஆய்வுக்குச் சென்ற நலக்குழு உறுப்பினர்கள் அதிருப்தி

சேரன்மகாதேவி, ஜூன் 20:
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சியில், மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நல கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வுப் பணிக்காக பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றபோது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்காததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆய்வின் ஒரு பகுதியாக, தூய்மை பணியாளர்களின் பணிநிலை, அவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பணிச்சூழல் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள நலக்குழு உறுப்பினர்கள் முயன்றனர்.

ஆனால், பேரூராட்சி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் இல்லாததுடன், அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நேரில் சந்தித்து பேசவும் அனுமதி வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆய்வுக்காக சென்ற குழுவினர் கடும் அதிருப்தி மற்றும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், “அரசின் நலத்திட்டங்கள் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவே நாங்கள் கள ஆய்வுக்கு வருகிறோம். ஆனால், அதிகாரிகள் அலட்சியமாக நடந்துகொள்வதும், தேவையான ஒத்துழைப்பை வழங்காமல் இருப்பதும் ஏமாற்றமளிக்கிறது. இந்த விவகாரம் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்” என்றனர்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினர் திருமதி தேவி இசைச்செல்வன், மாவட்ட தூய்மை பணியாளர்கள் நல கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் திரு. அர்ஜுனன், திருமதி. பாஞ்சாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், பத்தமடை பேரூராட்சியில் இதேபோன்ற ஆய்வுக்காக சென்றபோது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியதாகவும், தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் வழங்கியதாகவும் நலக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும், அரசு அமைத்துள்ள கண்காணிப்பு குழுக்களின் ஆய்வுப் பணிகளுக்கு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், நலத்திட்டங்களின் செயல்பாடுகளை வெளிப்படையாகக் கண்காணிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.